மனித உடலிலே கடவுள் எங்கே இருகின்றார்? – Part 02

மனித உடலிலே கடவுள் எங்கே இருகின்றார்? – Part 02

• ………உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து அவற்றின் உயிக்கு உயிராய் ஆங்காங்கே நின்றான்…………..
கடவுள் உயிருக்கு உயிராக, உயிரின் எசமானாக, உயிரின் தலைவனாக ஒவ்வொரு உயிரிலும் உறைகின்றான்.
– 1ம் திருமுறை, சம்பந்தர் தேவாரம்

மூவகை ஆகாசங்கள்:

1. சட ஆகாசம் Part – 1
https://m.facebook.com/story.php?story_fbid=112512271891689&id=100093987489378&sfnsn=mo&mibextid=RUbZ1f

2. சிதாகாசம்: Part – 2

எமது உயிரிலும் இருதய குகை என்னும் ஒரு சிறுவெளி உள்ளது. அறிவும், உணர்வும் உள்ள எதுவும் சித்து எனப்படும். உயிரானது அறிவும், உணர்வும் உடையதால் சித் ஆகும். சித்தாகிய உயிரின் பகுதியாக உள்ள இந்த அகாசம் சித் + ஆகாசம் = சிதாகாசம் எனப்படுகின்றது. இதை சித் + அம்பரம் = சிதம்பரம் என்றும், சிறு + அம்பலம் = சிற்றம்பலம் என்றும் அழைப்பர். அம்பரம், அம்பலம் என்பன வெளியைக் குறிக்கும் சொற்களாகும். உயிரின் நடுவே இந்த குகையில் உறையும் குகனாகிய இறைவன் அங்கு எமது மலங்கள் அற ஆடிக்கொண்டிருக்கும் நடனம் சூக்கும நடனம் எனப்படுகின்றது.

• “மாயை தனைஉதறி………………………….
……………………………….தானெந்தை யார்பாதம் தான்.”

எமது உயிரின் மாயா மலத்தை உதறி எறிந்து,
கர்ம வினைகளைச் சுட்டுப் பொசுக்கி,
ஆணவ மலத்தை அமுக்கி அடக்கி,
தனது அருளினால் அணைத்தெடுத்து,
தனது அன்பினால் ஆனந்த வெள்ளத்தில் அழுத்தி நின்று
ஆன்மாவில் ஆடுவது எந்தையாகிய இறைவன் திருவடிகள் ஆகும்.
– மெய்கண்ட சாத்திரம், உண்மை விளக்கம் -36

இதனையே நான் சிவன் என்ற சிவோகம் பாவனையில் நின்று ஸ்ரீகிருஷ்ணர் தெளிவாக பகவத்கீதையில் பின்வருமாறு கூறுகின்றார்.

• அணுவுக்கும் அணுவாயும் பெரிதுக்கும் பெரிதாயும் உள்ள ஆத்மா (பரமாத்மா) இந்த ஜீவனுடைய குகையில் உறைவது
– கிருஷ்ண யசுர் வேதம், கட உபநிடதம் 2:20

• நான் அதிபூதமாகவும், அதிதைவமாகவும், அதிஞானமாகவும் சகல ஜீவராசிகளின் இதயத்தில் சாட்சியாக உறைகின்றேன்.
– பகவத்கீதை 7:30

• அர்ஜுனா, நான் பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளின் இருதயத்திலும் உறைகின்றேன்.
– பகவத்கீதை 10:20

• நான் பரமாத்மாவாக அவர்களுடைய இதயத்தில் உறைகின்றேன்.
– பகவத்கீதை 17:06

• “குஹாம் ப்ரவிஷ்டாவாத்மாநௌஹி தத்தர்சநாத்”

பிரம்மம் ஆத்மாவின் இதயக்குகையில் உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது.
– பிரம்ம சூத்திரம், குகாதிகரணம்1. 2. 43

• பரலோகத்தில் பராகாசம் உள்ளது போல கவிழ்ந்திருக்கும் தாமரை மொட்டுப்போன்ற இதயக் கமலத்தினுள்ளே ஒரு சிறு வெளி அல்லது ஆகாசம் (space) உள்ளது. இதை இருதய குகை என்றும் சொல்லுவர்.

• ”இனி இந்தப் பிரமபுரமாகிய சரீரத்திலே தாமரை போன்ற சின்னஞ் சிறிய மாளிகை ஒன்று உண்டு; அதனுள் உள்ள சிறிய வெளி சிற்றம்பலம்; அதில் உள்ளதெதுவோ அதைத் தேட வேண்டும். ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரமபுரத்தில், தாமரை போன்ற சின்னஞ்சிறு மாளிகையில் உள்ள சிற்றம்பலத்தில், அங்கு தேட வேண்டியதாய், ஆராய்ந்தறியக் கூடியதாய் என்னதான் இருக்கிறது? வெளியிலே இந்த ஆகாசம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இருதயத்தின் உள்ளே உள்ள ஆகாசமும். வானுலகும் பூவுலகும் இதனுள் அடங்கும். அக்கினியும், வாயுவும், சூரியனும், சந்திரனும், மின்னலும், நட்சத்திரங்களும், இன்னும் இங்கு வெளியில் எதெது உண்டோ, எதெது இல்லையோ அவை எல்லாம் இதனுள் அடங்கும். இந்த இருதய ஆகாசத்தில் இருப்பது (பரமாத்மா) இவனுடைய மூப்பால் மூப்படைவதில்லை; இவனுடைய சாவால் சாவதில்லை; இதுதான் அழியாத ஆன்மாவின் வீடு. இதில் எல்லா ஆசைகளும் அடங்கும். இவ்வாத்மா பாவமற்றது, மூப்பற்றது; சாவற்றது; சோகமற்றது; பசியற்றது; தாகமற்றது; அதனுடைய ஆசை உண்மையானது; அதனுடைய சங்கல்பம் உண்மையானது…..”
– சாம வேதம், சாந்தோக்கிய உபநிடதம் 8.1.1 – 5

• இந்த ஆத்மா (பரமாத்மா)பெரியது, பிறப்பில்லாதது,…..இருதய ஆகாசத்தில் உறைவது, அனைத்தையும் தன் வசம் கொண்டது, அனைத்தையும் ஆள்வது, அனைத்துக்கும் அதிபதி,….இந்த ஆத்மாவே ஸர்வேஸ்வரன்., உண்டாயவற்றிற்கெல்லாம் அதிபதி, எல்லாப் பொருள்களையும் பரிபாலிப்பவர்.
– சுக்ல யசுர் வேதம், பிருஹதாரண்யக உபநிடதம் 4.4.22

• மனதின் வடிவினனாயும், பிராணனை சரீரமாகக் கொண்டதாயும், பிரகாசம் பொருந்தியதாயும், பொய்யாத சங்கல்பம் உடையதாயும், ஆகாசம் போல் எங்கும் வியாபித்த இயற்கை உடையதாயும், எல்லாக் கருமங்களும், எல்லா ஆசைகளும், எல்லா வாசனைகளும், எல்லா சுவைகளும் தானேயாகி இவ்வுலகனைத்தையும் வியாபித்து நிற்பதாயும். வாக்கு முதலிய இந்திரியங்கள் இல்லாததாயும், விடய சுகங்களால் ஏற்படும் பூரிப்பு இல்லாததாயும் உள்ளது எனது (பர) ஆத்மா. என் ஆத்மாவாகிய இது நெல்லினும், யவத்தினும், கடுகினும், தினையினும், தினையரிசியினும் நுண்ணியதாய் என் இருதயத்தினுள் விளங்குவதாம். என்னுடைய (பர) ஆத்மாவாகிய இதுவே பூமியினும் பெரியதாயும், நடுவுலகினும் பெரியதாயும், வானுலகினும் பெரியதாயும், இவ்வுலகங்களெல்லாவற்றினும் பெரியதாயும் என் இருதயத்தினுள் விளங்குவது.
– சாம வேதம், சாந்தோக்கிய உபநிடதம் 3: 14: 2 -3

• நாடா என்னுள் கரந்து………………………..
…………………..என்வழி நின்றனனெந்தை”
– மெய்கண்ட சாத்திரம், இருபா இருபஃது18: 5-13

• இருமுலை நடுமார் படிவயி றிதன்மேல்
இருமுப் பொருளுள நிறம்பல இவற்றுள்
ஒரு பொருள் ஆம்பல் அரும்பென உள்ளே
இருவிரல் வலத்தே யிருப்பது மிதயம்.
அதன்முக மிகலுள தகமுள சிறுதுளை
யதனிலா சாதியொ(டு) அமர்ந்துள திருந்தம
மதனையா சிரித்துள வகிலமா நாடிக(ள்)
அதுவளி மனதொளி யவற்றின திருப்பிடம்
அந்த இருதய கமலத்தின் அகத்துள்ளே ஒரு சிறிய வெளி உள்ளது.
– இரமண மஹரிஷி பாடல்

• இதுவே சிற்றம்பலம்;
சிறிய + அம்பலம் = சிற்றம்பலம்
அம்பலம் என்றால் வெளி.
இதுவே சிதம்பரம்;
சித்+அம்பரம் = சிதம்பரம்
இதுவே சிதாகாசம்;
சித்+ஆகாசம்= சிதாகாசம்
இதையே தஹராகாசம் அல்லது சித்பரம் என்று வேதங்களும், வியோமாகாசம் என்று ஆகமங்களும்,
திருச்சிற்றம்பலம் என்று சைவத் தமிழ்த் திருமுறைகளும் கூறுகின்றன.
இந்த வெளி அல்லது ஆகாசமே பராசக்தியாகும்.

• எமக்கு ஞானம் கிடைக்கும்போதுதான், கவிழ்ந்திருக்கும் இதயத்தாமரை அரும்பு நிமிர்ந்து மலர அதனுள்ளிருக்கும் வெளியானது புலப்படும். அப்போது அங்கிருக்கும் இறையும் புலப்படும். கோவில்களில் இருக்கும் எல்லா தெய்வ வடிவங்களும் பதும பீடம் என்னும் தாமரைப் பீடத்திலேயே நிற்பதாக அல்லது அமர்ந்திருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எமது வீட்டில் உள்ள சுவாமிப்படங்கள் பலவற்றிலும் தெய்வங்கள் தாமரை மலரில் நிற்பதாக அல்லது அமர்ந்திருப்பதாக சித்தரித்து உள்ளதும் இதனாலேயே.

3. பராகாசம்:………. Part – 3

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)

அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *