சைவநெறி கடவுள் கொள்கை Part – 2

சைவநெறி கடவுள் கொள்கை Part – 2

இந்த உலகத்துக்குக் காரணமான கடவுள் ஒருவரே. வெவ்வேறு மதத்தவர்கள் கூறும் ஒவ்வொரு கடவுளும் வானிலே தத்தமக்கென்று தனித்தனி இடம் பிடித்துக்கொண்டு இருப்பதில்லை. கடவுளுக்கு நாமரூபங்கள் கிடையாது. நாம ரூபமற்ற இந்த ஒப்பற்ற இறையைச் சைவம் பரசிவம் என்ற பெயரால் கூறுகின்றது. வேதங்கள் இதையே பரப்பிரம்மம் என்று வழங்குகின்றன. உபநிடதங்கள் இதை தத் அல்லது அது என்று சொல்லுகின்றன. நாம ரூபமற்ற ஒப்பற்ற இந்த இறை எம்மீதுள்ள அளப்பருங் கருணையால் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றது. பெயர், உருவம் இல்லாத இந்த இறை எமக்காக பெயர், உருவம் தாங்கி வெளிப்படும் நிலையை நாம் சிவன் என்று சைவத்தில் அழைக்கின்றோம். இதுவே நாம் காணும் காரியங்களுக்கெல்லாம் மூல காரணம்; கர்த்தா. இதையே யெஹோவா என்றும், பிதா என்றும், அல்லா என்றும், அஹுரத் மஸ்டா என்றும், ஒன்றும் இல்லாத சூனியம் என்றும் வெவ்வேறு மதத்தவர்கள் தத்தமக்கு
வெளிப்படுத்தப்பட்டவாறும், புரிந்தவாறும் அழைகின்றார்கள். அவ்வளவுதான்.

ஆதாரம் 1:

அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்
சகளமாய் வந்ததுஎன்று உந்தீபற
தானாகத் தந்ததுஎன்று உந்தீபற
– திருவுந்தியார்-1, மெய்கண்ட சாத்திரம்

அகளம் – உருவற்றது; சகளம் – உருவமுள்ளது

ஆதாரம் 2:

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாதானுக்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
– திருவாசகம்

ஆதாரம் 3:

“ஏகம் சத் விப்ரதீம் பஹூதா வதந்தீம்”
உள்ளது ஒன்றே; அதுவே பலவாறாகப் பேசப்படுகின்றது.
-இருக்கு வேதம்

ஆதாரம் 4:

இந்துக்களின் பிரம்மான், சொரஸ்தியர்களின் அஹூரத் மஸ்டா, முஸ்லிம்களின் அல்லா, யூதர்களின் யெஹோவா, கிறிஸ்தவர்களின் பரலோகத்தில் இருக்கின்ற பிதா என்று பலவாறாக அழைக்கப்படுகின்ற ஒரே இறை உங்களுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கட்டும்.
– சுவாமி விவேகானந்தரின் முதலாவது சிக்காகோ பேருரை

ஆதாரம் 5:

அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்
– சிவஞானசித்தியார்– 2

ஆதாரம் 6:

“சிவன் அரு உருவும் அல்லன்; சித்தினோடு அசித்தும் அல்லன் பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானும் அல்லன்; தவம்முதல் யோக போகம் தரிப்பவன் அல்லன்; தானே இவைபெற இயைந்தும், ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே.”
– சிவஞானசித்தியார் – 90

ஆதாரம் 7.

“யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல் வினையுஞ் செய்யும்; ஆதலான் இவையிலா தான் அறிந்தருள் செய்வனன்றே.”
– சிவஞானசித்தியார் – 115

ஆதாரம் 8

“பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை;
பிறிதல்லை; ஆனாயும் பெரியாய் நீயே”
– 6ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

ஆதாரம் 9

“எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பன் – எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான்….”
– 11ம் திருமுறை, சேரமான் பெருமாள் அருளிய திருக்கைலாய ஞான உலா.

ஆதாரம் 10

“இதுவே பொருள் என்று எவரெவர் கூறினும் ஏற்பது எதுவோ
அதுவே பொருள் என்று அறிந்து கொண்டேன்.”
– குமரகுருபரர் திருவாரூர் நான்மணி மாலை – 23

ஆதாரம் 11

“யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும், அதுபோய் முக்கண் ஆதியை அடையும், அம்மா; அங்கது போலத், தொல்லை வேதம துரைக்கநின்ற வியன்புகழ் அனைத்தும்,
மேலாம் நாதனை அணுகும், எல்லா நதிகளும் கடல் சென்றன்ன….
– கந்தபுராணம்

Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).