முருகன் ஏன் தமிழ்க்கடவுள்?
மருத்துவர் இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
மாயோன் என்னும் திருமாலும், சேயோன் என்னும் முருகனும், வேந்தன் என்னும் இந்திரனும், வருணனும் பண்டைத் தமிழர்களின் கடவுளராகத் தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றனர். கொற்றவை பாலை நிலத் தெய்வமாகக் கூறப்படுகின்றாள். தமிழர் தத்துவமாம் சைவ சித்தாந்தம் சிவனையே முழுமுதற்கடவுளாகக் கொண்டாடுகின்றது. ஆயினும் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்ற சிறப்புக்கு உரியவனாகின்றான். இது ஏன் என்று ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
சைவத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவன் தமிழோடு நெருங்கிய தொடர்புடையவன். அவன் தனது சக்தியாகிய பார்வதிக்கே தமிழ் கற்பித்த பெருமைக்கு உரியவன். இதை “ஆரியமுந் தமிழும் காரிகையார்க்குக் கருணை செய்தானே” என்கின்றது திருமந்திரம். தமிழ்நாட்டில் பெண் எடுத்த பெருமைக்கு உரிய சிவனார் அதன் பின் தனது மாமனார் வீடாகிய மதுரையையே தனது இடமாகக் கொண்டவர். இதை ”தென்னாடுடைய சிவனே போற்றி” என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார். மதுரையில் முதலாம் தமிழ் சங்கம் அமர்ந்து தமிழ் வளர்த்த கடவுள் சிவன். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் ( சிவபெருமான்), குன்றெறிந்த முருகவேளும் (கிரௌஞ்ச மலையை வேல் கொண்டு தொளைத்த முருகன்) முதலாம் தமிழ் சங்கத்தில் புலவர்களாக இருந்து தமிழ் வளர்த்ததாக இறையனார் அகப்பொருள் எனும் காதல் இலக்கண நூலுக்கு நக்கீரர் செய்த உரை கூறுகின்றது. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் புலவராகிய நக்கீரனுக்குத் தமிழின் இலக்கண நுணுக்கங்களைக் கற்பித்ததாகத் திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. அகத்தியருக்குத் தமிழ் கற்பித்தவன் சிவன். சிவபெருமான் தன்னுடைய திருமணத்துக்கு எல்லொரும் கைலையில் கூட அதனால் உலகின் வடபாதி தாழ்ந்து தென் பாதி உயர்ந்ததைச் சமப்படுத்த அகத்தியரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு தமிழ் அறிவித்து அவரை தென்னாட்டுக்கு அனுப்பியதாக கந்த புராணம் கூறுகின்றது.
காதலைக் கொண்டாடும் மொழி தமிழ், கொண்டாடும் பண்பாடு தமிழர் பண்பாடு. இந்தக் காதலுக்கு கற்பியல் என்றும், களவியல் என்றும் இலக்கணம் வகுத்து நூல் தந்தவன் சிவன். இவ்வாறு தமிழர் வாழ்விலும் மரபிலும் கொண்டாடப்படும் காதலுக்கு இலக்கணம் வகுத்து அறுபது சூத்திரங்களாகத் தந்தவர் சிவன். சிவபெருமான தமிழில் அருளிச்செய்த இறையனார் அகப்பொருள் எனும் தமிழ் நூல் காதல் இலக்கணங்களைக் கூறுகின்றது. திருமணத்துக்கு முன்னர் நிகழும் களவியல் காதல், திருமணத்தின் பின்னர் இல்லறத்தில் நிகழும் காதலாகிய கற்பியல் காதல் ஆகியவற்றை விளக்கும் இந் நூல் 60 சூத்திரங்களைக் கொண்டது. இவ்வாறு உலகிலேயே காதலுக்கு இலக்கணம் தந்த ஒரே கடவுள் சிவபெருமானே.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத்தமிழர் வாழ்வியலுடன் காதல் சார்ந்த அகத்துறை நன்கு உள்வாங்கப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று பதினெட்டுத் தொகுதிகளாகவுள்ளன சங்க இலக்கியங்கள். இவற்றில் எட்டுத்தொகை நூல்களில்
- 175 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட நற்றிணை;
-
- 205 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட குறுந்தொகை;
- 5 புலவர்களால் பாடப்பட்ட, 500 பாடல்கள் கொண்ட ஐங்குறுநூறு;
- 5 புலவர்களால் பாடப்பட்ட, 150 பாடல்கள் கொண்ட கலித்தொகை;
- 142 புலவர்களால் பாடப்பட்ட, 400 பாடல்கள் கொண்ட அகநானூறு;
- 13 புலவர்களால் பாடப்பட்ட, 22 பாடல்கள் கொண்ட பரிபாடல் (இவற்றில் 11 பாடல்கள் அகத்துறைக் காதற் பாடல்கள்) ஆகியவை
காதலுக்கென்றே உள்ள சங்க இலக்கியப் பாடல்களாகும்.
பத்துப்பாட்டு நூல்களில்
-
- 103 வரிகள் கொண்ட முல்லைப்பாட்டு,
- 583 வரிகள் கொண்ட மதுரைக்காஞ்சி,
-
- 188 வரிகள் கொண்ட நெடுநல்வாடை,
- 261 வரிகள் கொண்ட குறிஞ்சிப்பாட்டு,
- 153 வரிகள் கொண்ட பட்டினப்பாலை,
ஆகிய ஐந்து பாட்டுகளும் காதலைப் போற்றும் சங்க இலக்கியப் பாட்டுகளாகும். இப்படியாக எட்டுத்தொகை நூல்களிலே ஆறு நூல்களும், பத்துப்பாட்டு நூல்களிலே ஐந்து நூல்களுமாக சங்க இலக்கியப் பாடல்களில் பாதிக்கு மேல் காதலுக்கென்றே பாடப்பட்ட , காதலைப் போற்றும் பழந்தமிழரின் மரபுப் பாடல்கள். இந்த அகத்துறைப் பாடல்களிலே உள்ளப்புணர்ச்சியைக் காதல் என்னும் சொல்லாலும், மெய்யுறு புணர்ச்சி என்னும் உடற்புணர்ச்சியைக் காமம் எனும் சொல்லாலும் குறிப்பிடுகின்றனர்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
என்ற குறுந்தொகை 40ம் பாடல் அகத்துறைப் பாடல்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
இது மட்டுமல்லாது ”நிலைத்தமிழின், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்” என்று உமாபதி சிவாச்சாரியார் அவர்களால், மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான அவர் அருளிய நெஞ்சுவிடு தூது நூலிலே மெய் நூலாகப் போற்றப்பெறும் திருக்குறள் நூலில், 25 தலைப்புகளில் 250 குறள்கள் காமத்துப் பால் என்று காதலுக்கு என்றே தனிப்பட எழுதியுளார்.
இவ்வாறு தமிழர் வாழ்வியலோடு இரண்டறப் பிணைந்திருக்கும் காதல் என்னும் அகத்துறையை தன்னுள் உள்வாங்கி பக்தி என்னும் இறையுணர்வுடன் பிணைத்துக் கொண்டாடி உள்ளுறை உவம வகையில் மெய்யியல் ஆக்கியது சைவமும் அதன் 18,400 பன்னிரு திருமுறைப் பாடல்களும். 8ம் திருமுறையில் உள்ள மாணிக்கவாசகரின் திருக்கோவையார், 11ம் திருமுறையில் உள்ள சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாய உலா ஆகியவை சைவத்திருமுறைகளில் காதல் என்னும் அகத்துறைக்கே உரிய தனித்துவமான பாடல்களாகும். வைணவத்திலும் ஆண்டாள் பாடல்களில் அகத்துறை சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.
சிவ தோத்திரங்களான தேவாரம், பெரியபுராணம் போன்ற ஏனைய பாடல்களிலும் காதல் சுவை உள்ள பாடல்கள் பல உள்ளன. பின்வரும் திருமுறைப் பாடல்கள் இவற்றில் சிலவாகும்.
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே
- சம்பந்தர் தேவாரம், திருமுறை 01:60:10
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
அப்பர் தேவாரம், திருமுறை 6.25.07
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!
– அப்பர் தேவாரம், திருமுறை 5.40.01
முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
– அப்பர் தேவாரம், திருமுறை 6.13.02
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
– அப்பர் தேவாரம், திருமுறை 6.13.03
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
– அப்பர் தேவாரம், திருமுறை 6.13.06
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
– அப்பர் தேவாரம், திருமுறை 6.13.07
சுந்தரர் பரவையாரைக் கண்டதும் கொண்ட காதல் உணர்வை
கற்பகத்தின் பூம்கொம்போ? காமன் தன் பெருவாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்.
என்று 12ம் திருமுறையான பெரியபுராணம் கூறுகின்றது.
ஒரு பெண்ணான பரவையார் கொண்ட காதல் உணர்வையும் இதெ பெரியபுராணம் பின்வருமாறு கூறுகின்றது.
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்
தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ?
என்னே! என் மனந் திரித்த இவன் யாரோ? எனநினைந்தார்.
காதலில் காதலர் இருவரின் கூடல் மட்டுமல்ல ஊடலும் கூட காதலுக்குச் சுவை சேர்க்கும் என்று சொன்னது தமிழ்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
- திருக்குறள்
உமையும் சிவனோடு ஊடியதையும் அந்த ஊடலைத் தீர்க்க சிவனார் ஆடியதையும் நினைவு கூர்ந்து இரசிக்கும் வரிகள் தேவாரத்தில் உள்ளன.
சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்(கு)
ஊடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
- அப்பர் தேவாரம்
இவ்வறெல்லாம் தமிழர் வாழ்வியலில் கொண்டாடப்படும் காதலுக்கு அகத்துறை இலக்கணம் தந்த கடவுள் சிவன். தமிழ் நாட்டில் பெண்கொண்ட கடவுள் சிவன். தமிழ்மரபுப்படி காதல் மங்கையோடு ஊடுவதும் கூடுவதும் செய்து களிப்பவன் சிவன். தெந்தமிழ் நாடாகிய தென்னாட்டையே தன்னாடாகக் கொண்ட கடவுள் சிவன். சங்கம் அமர்ந்து தமிழ் வளர்த்த கடவுள் சிவன். பார்வதிக்கும், அகத்தியனுக்கும், நக்கீரனுக்கும் தமிழ் கற்பித்த கடவுள் சிவன். பன்னிரு திருமுறைகளாகப் பதினெண்ணாயிரம் பாடல்களால் தமிழிலே பாடப்பட்ட கடவுள் சிவன். தமிழர் சமயமாம் சைவத்தின் முழுமுதற் கடவுள் சிவன். தமிழர் தத்துவநெறியாம் சைவசித்தாந்தத்தின் தோற்றுவாய் சிவன்.
இவ்வாறு இருக்க முருகன் மட்டும் எப்படித் தமிழ் கடவுள் ஆனார்?
முருகனும் தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தார். இதை இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரை ”குன்றெறிந்த குமரவேளும்” என்று குறிப்பிடுகின்றது.
முருகன் அகத்தியருக்கு தமிழையும் அதன் நுணுக்கங்களையும் கற்பித்ததாக கந்தபுராணமும், சிவஞானசித்தியாரும் கூறுகின்றன.
அருமறை ஆகமம் அங்கம் அருங்கலைநூல் தெரிந்த
அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குரு
என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.
பன்மொழி நிலவும் பாரத தேசத்தில் சிவன், திருமால், கொற்றவை என்னும் அம்பிகை முதலான பல கடவுளர்களின் வழிபாடு எங்கும் பரவலாக இருந்தாலும் முருக வழிபாடு சிறப்பாகக் காணப்படுவது தமிழ் நாட்டிலேயே. இந்தியாவின் மற்றைய மாநிலங்களிலும் கார்த்திகேயன் என்றும், சுப்பிரமணியன் என்றும் ஆங்காங்கே முருக வழிபாடு இருந்தாலும் கந்தன் என்றும், கடம்பன் என்றும், முருகன் என்றும் குன்றுகள் தோறும் மட்டுமல்லாது, தமிழ் வழங்கும் நிலம் எங்கும் தமிழர் வாழும் இடம் எங்கும் கோயில் கொண்டுள்ள பெருமையும் தனித்துவமும் முருகனுக்கே உரியது. இவ்வாறு தமிழர்களால் அவர்கள் வாழும் இடமெல்லாம் கோயில் கொண்டு கொண்டாடப்பட்டும், வணங்கப்பட்டும், வாழ்த்தப்பட்டும் வருவதனாலேயே முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்கின்றோம். இதுவே பல ஆய்வாளர்களினதும் முடிபும்கூட. இதை நாம் மறுப்பதற்கில்லை. ஆயினும் இதனால் மட்டுமா முருகன் தமிழ்க்கடவுள் என்னும் தகுதியைப் பெறுகின்றான் என்றால் இல்லை, இதற்கும் மேலான விடயம் ஒன்று உண்டு.
சைவமும் தமிழும் வேதங்களும் கூறும் நீலமணிமிடற்றுச் சிவன், கொற்றவை, கண்ணன் என்னும் திருமால், வேந்தன் என்னும் இந்திரன், வருணன் முதலாய பல தெய்வங்கள் தமிழர் மரபில் இருந்தாலும், சிவனாரும் முருகனும் தமிழை ஆய்ந்தும், கற்பித்தும், ஆதரித்தும், வளர்த்தும் இருந்தாலும், தமிழ் மரபின் அகத்துறையாகிய காதலைக் கொண்டாடினாலும் காதலின் களவியல், கற்பியல் என்ற இரு துறைகளில் களவு முறையில் வள்ளியிடம் சென்று, அவள் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்து, பல்வேறு கோலம் காட்டியும், ஆசை காட்டியும், பயம் காட்டியும் பல வகைகளில் முயன்று வள்ளியின் காதலை வென்றவன் முருகன். இவ்வாறு வள்ளியின் மனதை வென்ற பின்னரும் அவளின் சுற்றத்தார் யாரும் அறியா வண்ணம் சந்தித்தும், கூடியும் மகிழ்ந்தவன் முருகன். வள்ளியின் பெற்றோரும், குடும்பத்தாரும் இதை அறிந்து எதிர்த்துப் போரிட்டபொழுது அவர்களுடன் போராடி வென்று வள்ளியைக் கை பிடித்தவன் முருகன். காதலுக்காக வள்ளியின் குடும்பத்தாருடன் மோதிப் போரிட்டு வென்றாலும் ஈற்றில் பெண்வீட்டாருடன் சமாதானமாகி ஒன்றுகூடியவன் முருகன். மொத்தத்தில் முருகனின் காதலானது தமிழ் மரபின் அகத்துறையின் களவுக்காதல் மட்டுமல்ல, இன்றளவும் நம் தமிழர் வாழ்க்கையிலும், கலைகளிலும், இலக்கியங்களிலும், சினிமாவிலும் கூடத்தொடருகின்ற உயிர்ப்பான பச்சைத்தமிழ்க் காதல். என்னதான் சிவனார் காதலுக்கு இலக்கணம் வகுத்தாலும், அவர் உட்பட மற்ற தெய்வங்கள் தம்மளவில் வரம்பு மீறாது கற்பியல் காதல் மரபுடன் நின்றுகொள்ள முருகனோ அந்த கற்பியல் மரபில் தெய்வயானையைக் கரம்பிடித்தோடு மட்டுமல்லாமல் சங்கத்தமிழர் கொண்டாடும் களவு நெறிக்காதலில் திளைத்து வள்ளியைக் கரம் பற்றியவர். இவ்வாறு சங்கத்தமிழர் போற்றும் களவியற் காதலில் திளைத்த நமது கதாநாயகன் முருகன். ஆதலால் முருகன் தமிழ்க்கடவுள். இதனாலேயே முருகன் ஒருவனுக்கே தமிழ்க்கடவுள் என்னும் தகுதியும் சிறப்பும் பெருமையும் தனித்துவமும் பொருந்தி அமைகின்றது.
பணியா என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே
– கந்தர் அனுபூதி