சைவத்தின் அண்டவியல் விஞ்ஞானம் Part – 02 – Hindu Cosmology and Science Part – 02

சைவத்தின் அண்டவியல் விஞ்ஞானம் Part – 02
Hindu Cosmology and Science Part – 02
இன்றைய வானியல் விஞ்ஞானத்துக்கு ஒப்பான காலக்கணிப்பை அண்டவெளியுடன் தொடர்புபடுத்திக் கண்டது எமது சமயம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விடயங்களையெல்லாம் யுகங்கள், கல்பங்கள் என்னும் பாரிய காலக்கணிப்பில் இன்றைய விஞ்ஞானத்துக்கு ஒப்பான முறையில் அன்றே சொன்னது சைவம்.

இந்த அண்டங்கள் அணுக்கள் யாவும் primordial matrix என்னும் அடிமூலமான கருப்பொருளில் இருந்து தோன்றி வியாபித்திருப்பதாக விஞ்ஞானம் கூறுகின்றது. சைவமோ இந்த அடிமூலத்துக்கும் மூலமாய் இருப்பது அளந்து கணித்து அறியமுடியாத மாயை என்னும் சூட்சும இருப்பு என்று கூறுகின்றது. இவ்வாறு தோன்றி நிலைபெற்றிருக்கும் அண்டத்தொகுதிகளைச் சைவம் பிரகிருதி மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை உலகங்கள் என மூன்று பகுதிகளாக விளக்குகின்றது.

மூவகை உலகங்கள்

 

 சுத்தமாயா உலகங்கள் (Pure Cosmic Worlds)
 அசுத்த மாயா உலகங்கள் (Impure Cosmic Worlds)
 பிரகிருதி மாயா உலகங்கள் (Prakrithi Cosmic Worlds) – Observable worlds

 

இந்த வேறுபட்ட இயற்கைகளினாலான அண்டத்தொகுதிகளை மூன்று பெரும் பிரிவுகள் அல்லது மண்டலங்களாகச் சொல்லுகின்றது எமது சமயம். நாம் இருக்கும் எமது இயற்கையுடன் கூடிய அண்டத்தொகுதிகள் யாவும் பிரகிருதி மாயா உலகங்கள் ஆகும். எமது விஞ்ஞானம் ஆராய்வதும், வெளிப்படுத்துவதும், நாம் கற்பதும் இந்த அண்டங்களையும் அவற்றின் இயற்கையுமே.

 

இதற்கு அடுத்த மண்டலம் அசுத்த மாயா உலகம். இதன் அண்டத்தொகுதிகள், அவற்றின் இருப்புகள், இயற்கை விதிகள் நமது பிரகிருதி அறிவு, ஆராய்ச்சி, கணிப்பு, எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டவை.

 

இதற்கும் அடுத்த மண்டலம் சுத்தமாயா உலகம். இதன் இயற்கையும் முன்னைய பிரகிருதி மாயை மற்றும் அசுத்த மாயை உலக இயற்கைகளுக்கும் விதிகளுக்கும், அறிவு, ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது.

 

உண்மையில் இந்த மூன்று வகை அண்ட மண்டலங்களும் ஒன்றுக்கு ஒன்று அப்பால் இருப்பதுபோல் தோன்றினாலும் இவை ஒன்றை ஒன்று ஊடறுத்தும், ஊடுருவியும் உள்ளன; பயணிக்கின்றன. ஆயினும் அவற்றின் வேறுபட்ட இயற்கையினால் நமது அறிவுக்கும், புலனுக்கும், ஆராய்ச்சிக்கும் அது எட்டுவதில்லை.

 

சுத்தமாயா உலகமானது அதனிலும் கீழ்ப்பட்ட அசுத்தமாயா உலகையும், பிரகிருதிமாயா உலகையும் ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கும்; பயணிக்கும்.
இதேபோல் அசுத்தமாயா உலகம் அதனிலும் கீழ்ப்பட்ட பிரகிருதி மாயா உலகை ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கும்; பயணிக்கும்.
ஆயினும் அவற்றின் வேறுபட்ட இயற்கையினால் நமது அறிவுக்கும், புலனுக்கும், ஆராய்ச்சிக்கும் அவை எட்டுவதில்லை.

 

ஆனாலும் அசுத்த மாயா மண்டல அண்டங்களுக்கு நமது பிரகிருதி மாயா உலகங்களின் இருப்பும் இயற்கையும் புலனாகும்; ஆனால் சுத்த மாயா மண்டல இருப்புகள் புலனாகா. சுத்த மாயா மண்டல அண்டங்களுக்கு அசுத்த மாயா மற்றும் பிரகிருதி மாயா மண்டல அண்டங்கள், அவற்றின் இயற்கைகள், இருப்புகள் யாவும் புலனாகும்.

 

இந்த மூன்று மண்டல அண்டங்களுக்கும் அவற்றின் இயற்கை இருப்புகளுக்கும் அப்பாற்பட்டதே இறை. இறை இந்த மூவகை உலகங்களையும் வியாபித்தும் ஊடுருவியும் அதே சமயம் இவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் இருப்பது. மூவுலகங்களுக்கும் அப்பாலான அதன் இருப்பை பரலோகம் என்பர். அது இயற்கை மூலகங்களினாலோ விதிகளினாலோ ஆனது அல்ல. அது இறையின் தூய சக்தியினால் ஆனது. இதுவே பரடைஸ் என்று ஈரானிய, கிரேக்க அங்கில மொழிகளில் வந்தது.

 

பரலோகம் என்பது எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு இடம் அல்ல; அது இங்கும், அங்கும், அதற்கப்பாலும், எங்கும் உள்ள இறையின் இருப்பு வியாபகம் ஆகும். இது மேற்கூறப்பட்ட மூவுலகங்களையும் ஊடுருவியும், வியாபித்தும், அவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் இருக்கின்றது. இந்த இறையையே நாம் பரசிவம் என்றும், பராசக்தி என்றும், பரப்பிரம்மம் என்றும், பரமாத்மா என்றும், பரம்பொருள் என்றும், பரலோகத்தில் இருக்கும் பிதா என்றும், பரஞ்சோதி என்றும், பரங்கருணை என்றும், பரமானந்தம் என்றும் பலவாறாகக் கூறுகின்றோம்.

 

இந்த இறையை அடைவதையே பரகதி என்றும், பர முத்தி என்றும், பரமபதம் என்றும் சொல்லுகின்றோம். பரலோகத்தை இறைவனின் வீடு என்று சொல்லலாம். இதனை அடைவதை வீடுபேறு என்பர்.

 

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).