சைவக்கிரியைகள் (Part 2, 3) – நியாசமும்_பாவனையும்_Part 2

சைவக்கிரியைகள் (Part 2, 3)
நியாசமும்_பாவனையும்_Part 2

Part 1 link…….
சைவக்கிரியைகள் – 01 

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி அவனை
அவனெனக் கண்டார் நிரயத்தார்.”
மற்றத் தேவர்களை வழிபடும்போது அவர்களைச் சிவன் எனவே சிந்தித்து வழிபடு, சிவனை அத் தேவர்களுள் ஒருவராக கண்டு வழிபடுபவர் நரகத்தைச் சேர்வர்.
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர்

அருளிய சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

அகத்தே தேகம் என்னும் ஆலயத்தில் ஆன்மா என்னும் இலிங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சிவத்தைப் பூசியாமல் வெளியே உள்ள விக்கிரகத்தில் கடவுளைப் பூசிப்பது உள்ளங்கையில் உள்ள அமுதை உண்ணாமல் புறங்கையை நக்குவது போலாகும் என்று சிவாகமங்கள்
கூறுகின்றன.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
-திருமந்திரம்

ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் – நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
– பட்டினத்துச் சித்தர் பாடல்

வெளியிலே உள்ள மூர்த்தி அல்லது உருவம் ஒன்றில் இறையைப் பாவனையாக வரவழைத்து இருத்தி எழுந்தருளப்பண்ணிப் பூசிப்பது புறப்பூசை.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே
– தாயுமானார் பாடல்

இவ்வாறு எழுந்தருளப்பண்ணும் ஊடகம் அல்லது மூர்த்தமும் மூன்று வகைப்படும். அவையாவன
1. கும்பம்,
2. விம்பம்,
3. இயந்திரம் என்பனவாகும்.

1. கும்பம்:
நீர் நிரப்பிய குடம் அல்லது பாத்திரம் ஒன்றில் இறையைப் பாவித்து, எழுந்தருளப்பண்ணிப் பூசித்தல் கும்ப பூசை ஆகும்.
2. விம்பம்:

விம்பம் என்பது உருவம். உருவம் ஒன்றில் இறையைப் பாவித்து, எழுந்தருளப் பண்ணிப் பூசித்தல் விம்ப பூசை ஆகும். இந்த விம்பம் அல்லது உருவம் சிவ இலிங்கமாக இருத்தல் உத்தமத்தில் உத்தமம். இலிங்கம் என்றால் குறி அல்லது அடையாளம் என்று பொருள். பூசிக்கப்படும் எந்த உருவத்தையும் எமது முழுமுதற்கடவுளாகிய சிவத்தின் இலிங்கமாக, அடையாளமாகவே சைவர்கள் பாவித்தல் வேண்டும்.
“இங்கு நாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்(து) அங்கு வான் தருவார்? அன்றேல் அத் தெய்வம் அத்தனைக் காண்; எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது; அங்கு நாம் செய்யுஞ் செய்திக்கு ஆணை வைப்பால் அளிப்பன்.”
– சிவஞானசித்தியார்

சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அனைத்து தெய்வ விக்கிரகங்கள் அல்லது பிரதிமைகளும் இலிங்கமே. இவை உத்தம வடிவங்கள்.

3. இயந்திரம்:
வரைபுகள் குறியீடுகள் மந்திர அட்சரங்களை ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறைப்படி உலோகத்தகடு, மரப்பலகை, தானியம், விபூதி முதலானவற்றில் வரைந்து
அங்கு இறைவனை எழுதருளப் பண்ணிப் பூசித்தல் இயந்திர பூசையாம்.

சைவக்கிரியைகள்
நியாசமும்_பாவனையும்_Part – 3

“சிவனெனவே தேவரையுஞ் சிந்தி அவனை
அவனெனக் கண்டார் நிரயத்தார்.”
மற்றத் தேவர்களை வழிபடும்போது அவர்களைச் சிவன் எனவே சிந்தித்து வழிபடு. சிவனை அத் தேவர்களுள் ஒருவராக கண்டு வழிபடுபவர் நரகத்தைச் சேர்வர்.
– சிதம்பரம் கண்கட்டி மடம், மறைஞானசம்பந்தர் அருளிய
சங்கற்ப நிராகரணம், குறள் 8:41

பாவனை:
பாவனையே சைவக்கிரியைகளுக்கு உயிர் கொடுப்பது. சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அனைத்து தெய்வ விக்கிரகங்கள் அல்லது பிரதிமைகளும் இலிங்கமே. இவை உத்தம வடிவங்கள். இவற்றில்

1. முட்டை வடிவான அண்ட சராசரங்களிலும், அண்ட சராசரம் எங்கும் வியாபகமாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரிய, சந்திரர்கள், உயிர்கள் என்னும் அட்ட மூர்த்தங்களிலும் அண்டலிங்க வடிவிலும்,
2. பிறவியெடுத்த ஒவ்வோர் உடலிலும் தேக வடிவாக பிண்டலிங்க வடிவிலும், (பிண்டம் என்றால் தேகம்)
3. தேகத்தில் உறையும் உயிராக ஆன்மலிங்க வடிவிலும்,
4. ஆன்மா ஒவ்வொன்றிலும் உயிர்க்கு உயிராக மெய்யறிவு வடிவில் ஞான சொரூபமாக ஞானலிங்க வடிவிலும், இறையைப் பாவித்துத் தியானித்து,
5. அதே இறையை, முன்னால் உள்ள இலிங்கம் அல்லது உருவத்தில் சதாசிவ மூர்த்தமாக ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து தலைகளும், முகங்களும், இருதயம், குய்யம், சிரசு, சிகை, கண்கள் முதலான அங்கங்களும், கவச குண்டலங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள் முதலான உப அங்கங்களும் கொண்ட சதாசிவலிங்க வடிவில் பாவிப்பது பாவனை என்னும் கிரியையின் சாரம் ஆகும்.

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப்பிரானைத்
தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே .
அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே .
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே .
நாலுள்நல் ஈசானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே .
நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே .
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.
– திருமந்திரம்

முட்டை வடிவான இந்த அண்டம் முழுவதையுமே சிவலிங்கமாக பாவிக்கும் பாவனை அண்டலிங்கம்.

இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.
– திருமந்திரம்

தேகத்தையே சிவலிங்கமாகப் பாவிக்கும் பாவனை பிண்டலிங்கம். பிண்டம் என்றால் தேகம்.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.
– திருமந்திரம்

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.
– திருமந்திரம்

தேகத்தை ஆலயமாகவும் அதிலுள்ள ஆன்மாவைச் சிவலிங்கமாகவும் பாவிக்கும் பாவனை ஆன்மலிங்கம்.
சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.
– திருமந்திரம்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே
– திருமந்திரம்

ஆன்மா ஒவ்வொன்றிலும் உயிர்க்குயிராக உண்மை அறிவாக விளங்கும் ஞானத்தையே இலிங்கமாகப் பாவிக்கும் பாவனை ஞானலிங்கம்.
எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் நின்றானை……
– திருஞானசம்பந்தர் தேவாரம்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மையறிவே மிகும்
– திருக்குறள்

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.
– திருமந்திரம்

குருவடி பணிந்து
வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD
சைவ சித்தாந்த பீடம், கனடா
www.knowingourroots.com