உலகின் தீமைகளுக்கு எல்லாம் காரணம் இறைவனுக்கு எதிரான தீய சக்திகளா?
சைவம் உலகத்தின் தீயவைகளுக்கெல்லாம் இறைவனுக்கு எதிரான தீய சக்திகளைக் காரணம் கூறுவதில்லை. இவ்வாறு கூறுதல் இறைவனின் ஒப்பற்ற மகிமைக்கும் ஆற்றலுக்கும் பங்கமாகும். இறைவனுடைய மறைப்புச் சக்தியின் தொழிற்பாடே இவையெல்லாம் என்று நல்லதுக்கும் கெட்டதற்கும் கூட இறைவனே காரணம் என்று சொல்வது சைவத்தின் தனித்துவம்.
எங்களை எமது அனுபவ மற்றும் அறிவு முதிர்ச்சிக்காக இவ்வுலக வாழ்க்கையில் தோய்ந்து செலுத்துவது சிவனின் மறைப்புச் சக்தியாகிய திரோதான சக்தி என்று சைவம் சொல்லுகின்றது. ஆத்திகச் சமயங்கள் எல்லாமே கடவுளுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைக் கூறுகின்றன. இவை அருளல் என்பதை தனிச் செயலாகச் சொல்லாவிட்டாலும் அதையும் குறிப்பால் உணர்த்துகின்றன. இவற்றுக்கு மேலாக மறைத்தல் என்னும் தனித்துவமான தொழிலைக் கடவுளில் கண்டது சைவம். இதை பந்தித்தல் அல்லது பந்தம் என்று திருமுறைகள் கூறுகின்றன. எல்லா ஆத்திகச் சமயங்களும் உலகில் நல்லவை யாவற்றையும் கடவுளுக்கு ஏற்றிக் கூறி தீயவைகளை தீயசக்திகளினதும், அசுரர்களினதும் செயல் என்று கூறுகின்றன. நல்லவை மட்டும் அல்ல, தீயவைகளும் கூட கடவுளின் மறைப்புச் சக்தியான திரோதான சக்தியினூடான செயல்களே என்று காண்பது சைவம்.
சொற்பொருள்: ஆத்திகம் = கடவுள் நம்பிக்கை உள்ள
”வஞ்சகர்களின் சூதாட்டமாக இருப்பவனும் நானே……”
– சிவோஹம் பாவனையில் ஸ்ரீகிருஷ்ணர்
– பகவத்கீதை 10:36
”அடக்கி ஆள்பவரிடம் அடக்கும் சக்தியாக நானே இருக்கிறேன்…….”
– சிவோஹம் பாவனையில் ஸ்ரீகிருஷ்ணர்
– பகவத்கீதை 10:38
எமது சைவ ஆலயங்களில் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் ஓதப்படுகின்ற யசுர் வேதத்தின் ஸ்ரீருத்திரம் இவ்வாறே கூறுகின்றது.
கள்வர் தலைவருமாகிய பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம், நமகம் 3:2
கொள்ளைக்காரரின் தலைவருமாகிய பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:3
நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:4
வனங்களில் வழிப்பறிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:5
உழவாளியாயிருந்து எசமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:5
பிறரைக் கொன்று பொருளை அபகரிப்பவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:6
வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேசுவரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
– கிருஷ்ண யசுர் வேதம், ஸ்ரீருத்ரம் 3:7
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாய் எறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
– 6ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்குச்
சோதியுமாய் இருள் ஆயினார்க்கு
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே.
– திருவாசகம், 8ம் திருமுறை
சிவாலயங்களில் விழாக்காலங்களில் உலா வருகின்ற சிவன், கந்தன், உமை ஒன்றாக அமர்ந்திருக்கும் சோமஸ்கந்த மூர்த்திக்கு வலப்புறமாக நின்ற நிலையில் உள்ள சக்தியே இந்த திரோதாயி. இதை போக சக்தி என்றும் கூறுவர். சிவனுடன் அமர்ந்துள்ள சக்தி யோக சக்தி என்னும் திருவருட் சக்தியாகும்.
*** மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதல்.
சொற்பொருள்:
இருவினை = நாம் செய்யும் நல்லதும் கெட்டதுமான நல்வினையும், தீவினையும்;
போக்கியம் = போக அனுபவப் பொருட்கள்
*** திரோதாயியாவது யாவை? (போக சக்தி)
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையுந் தொழிற்படுத்திப் பாசம் வருவிக்கும் #சிவசக்தி. இது மலத்தைச் செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது.
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).