யாரெல்லாம் உருத்திராக்கம் அணியலாம் – மேற்கோள்களுடன்………

யாரெல்லாம் உருத்திராக்கம் அணியலாம் – மேற்கோள்களுடன்………

பொதுப்படையாக சைவ நூல்கள் விபூதி தாரணத்தை எல்லோருக்கும் பொதுவாக விதித்து, உருத்திராட்ச தாரணத்தை சிவ தீட்சை பெற்று, சமய ஆசார அனுட்டானங்களைத் தவறாது கடைப்பிடிப்போருக்கே விதித்திருக்கின்றன. இருந்தாலும், பல இடங்களில் உருத்திராட்ச தாரணத்தையும் எல்லோருக்கும் பொதுவாக விதந்தோதியிருக்கும் தன்மையையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. .

“பஹூனாம் ஜன்மநாமந்தே மஹாதேவ ப்ரஸாதத
ருத்ராக்ஷதாரணஸ்ரத்தா ஸ்வபாவேநைவ ஜாயதே”

சிவபெருமான் திருவருளால் அனேக சென்மங்களின் இறுதியிலே உருத்திராட்ச தாரணத்தில் (அணிவதில்) சுவயமாக அன்பு உதிக்கின்றது.
– பராசர புராணம்

“ருத்தராக்ஷதரு ஸம்பூதவாதோத்பூத த்ருணாந்யபி
புண்யலோகம் கமிஷ்யந்தி புநராவ்ருத்தி துர்லபம்”

உருத்திராட்ச மரத்தினின்று உண்டாய வாயுவினால் அடியுண்ட புற்களும் பிறவியில் மீண்டு வராதிருக்கும் நெறியைப் பாலிக்கும் புண்ணியவுலகத்தை அடைகின்றன.
– கருட புராணம்

“ஸுசிர்வாப்யாஸு சிர்வாபிஹ்யபஷயஸ்யச பக்ஷக
ம்லேச்சோவாப்யத சண்டாளோ யுக்தோவா ஸர்வபாதகை கண்டே ருத்ராக்ஷமாபத்ய ஸ்வாபி ம்ரியதே யதி”

சுத்தனாயிருந்தாலும், அசுத்தனாயிருந்தாலும், உண்ணத்தகாதவற்றை உண்டவனாயிருந்தாலும், மிலேச்சனாயிருந்தலும், சண்டாளனாயிருந்தாலும், சமஸ்த பாவங்களோடு இசைந்தவனாயிருந்தாலும் அவன் உருத்திராட்ச தாரணத்தினால் உருத்திரன் ஆகின்றான். கழுத்தில் உருத்திராட்சம் கட்டப்பெற்ற நாயும் இறக்குங்கால் உருத்திரத்துவத்தை அடைகின்றது. மனிதர் முதலாயினோர் தரிப்பின் அதைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
– ஸ்காந்த புராணம்

“ய:கண்டார்ப்பிதருத்ராக்ஷோ ஸ்வாநோபி ம்ரியதே யதி
ஸ ருத்ரபதமாப்நோதி கிம்புநர் மா நுஷாதய”

கழுத்திலே உருத்திராட்சம் கட்டப்பட்ட நாயும் இறக்குங்கால் உருத்திர பதத்தை அடைகின்றது.
– காலோத்தர ஆகமம்

“மரிக்கப்போகும் தருணத்தில் பத்தனானவன் குளித்து, தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து, விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரித்து, தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து. தலை கழுத்து கை முதலான இடங்களில் விதிப்படி உருத்திராக்கம் அணிந்து, விதிக்கப்பட்ட தானங்களைச் செய்து உயிர் விட வேண்டும். இறப்பு எதிர் பாராமல் நிகழுமானால் அவனுடைய புத்திரன் இவற்றை அவனுக்கு விதிப்படி செய்யவேண்டும்.”
– மகுட ஆகமம் சரியாபாதம் 2: 1-6

“சிவசின்னங்களாகிய விபூதி, உருத்திராக்ஷம் ஆகியன சாதி, தொழில் மற்றும் ஒழுக்கநெறி பேதமின்றி யாவராலும் அணியத்தக்கன.”
– சிவாக்கிரயோகி அருளிய சிவஞானபோத லகுதீகா,
12ம் சூத்திர உரை

“மாலறநேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன்எனத் தொழுமே”
– மெய்கண்ட சாத்திரம், சிவஞானபோதம் 12ம் சூத்திரம்

****** உருத்திராட்சம் தரித்தற்கு யோக்கியர் யாவர்? – ஆறுமுகநாவலர்

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.

*** எவ்வெக் காலங்களில் உருத்திராட்சம் ஆவசியகமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்? – ஆறுமுகநாவலர்

சந்தியாவந்தனம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும். தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.
ஆவசியகம் = அவசியம்

*** ஸ்நான காலத்தில் உருத்திராட்ச தாரணம் கூடாதா? — ஆறுமுகநாவலர்

கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராட்ச மணியிற் பட்டு வடியும் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).