சைவ மரபில் மஹா சாஸ்தா, ஐயனார், ஐயப்பன்… Part – 01

சைவ மரபில்
மஹா சாஸ்தா, ஐயனார், ஐயப்பன்…
Part – 01

சைவம் சிவ சம்பந்தமானது. சைவத்தின் கடவுள் சிவன். சிவனுடைய அருவத் திருமேனிகள் நான்கு. அவை

1. சிவம், (அபர)
2. சக்தி, (அபர)
3. நாதம்,
4. பிந்து என்பனவாம்.
5. சிவனுடைய அருவுருவத்திருமேனி சிவலிங்கம். இதை சதாசிவ மூர்த்தம் எனவும் சொல்வர்.
சிவனுடைய உருவத் திருமேனிகள் நான்கு.
6. மகா-பிரம்மா,
7. மகா-விஷ்ணு,
8. மகா-உருத்திரன்,
9. மகேசுவரன்.

இந்த மகா-பிரம்மாவும் மகா-விஷ்ணுவும் அடி முடி தேடிய பிரம்மா விஷ்ணுக்கள் அல்லர். இவர்கள் சம்பு பட்சமான சிவ-விஷ்ணுவும், சிவ-பிரம்மாவும் ஆவர். அடி முடி தேடிய பிரம்மாவும் விஷ்ணுவும் பிரம்ம பதமும் விஷ்ணு பதமும் பெற்று உயர்ந்த ஆன்மாக்கள் ஆவர். இவர்களை அணுபட்ச பிரம்மா, அணுபட்ச விஷ்ணு என்றும் கூறுவர்.

நிற்க, உருவத் திருமேனியில் ஒன்றான மகேசுவரனுடைய மூர்த்தங்கள் இருபத்தைந்து. நடராசர், தட்சிணாமூர்த்தி என்பன அவற்றுள் நாம் அறிந்த சிலவாகும். இந்த இருபத்தைந்து மூர்த்தங்களில் ஒன்று ஹரியர்த்தர். இதை சங்கரநாராயணர் என்றும் ஹரிஹரன் என்றும் கூறுவர். இது சிவனை வலப்புறத்திலும் விஷ்ணுவை இடப்புறத்திலும் கொண்ட திருவுருவம் ஆகும். “அரியலால் தேவி இல்லை” என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். இந்த மூர்த்தத்தின் உடைய புத்திரனாக ஹரிஹர புத்திரன் ஐயப்பன் விளங்குகின்றார்.

சிவன் தடை நீக்கத்துக்காகவும், ஞானத்தை அளிப்பதற்குமாக எடுத்த திருமேனி கணபதி. சைவ மரபில் முன்னர் இல்லாதிருந்த கணபதி வழிபாடு பெரியபுராணத்தின் சிறுத்தொண்ட நாயனாரான பரஞ்சோதியார் படைத்தளபதியாக இருந்து சாளுக்கியர்களின் வாதாபி நகரை வெற்றிகொண்ட போது அங்கிருந்து கொண்டு வந்து புகுந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆயினும் சிறுத்தொண்டர் வாழ்ந்த 7ம் நூற்றாண்டுக்கு முன்னரான பிள்ளையார் சிலைகள் இன்று தமிழ்நாட்டில் 5ம் நூற்றாண்டுக்குரியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சிறுத்தொண்டரின் சமகாலத்தவரும், அவரைக்கண்டு அளவளாவி மகிழ்ந்தவரும், சைவ சமய குரவரகள் நால்வரில் முதலாவதாக வைக்கப்படுபவருமாகிய திருஞானசம்பந்தர் தமது காலத்தில் புதிதாக வந்த கணபதி வழிபாட்டை எந்தவிதமான பேதமும் இன்றி ஏற்று தமது தேவாரத்திலும் “பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதி” என்று பாடிப்போந்துள்ளார். ஓம் என்ற பிரணவத்தின் வடிவான பெண்யானையின் வடிவை உமை எடுக்க, அதன் மிகுந்த விரிவாகிய பஞ்சாட்சர வடிவாகிய சிவன் ஆண்யானை வடிவு எடுத்து அவர்கள் இருவரின் சேர்க்கையால் நமது இடர்களைக் களைவதற்காகத் தோன்றியவர் கணபதி என்று பொருள் வரும். சிவமகாபுராணம், தேவி பாகவதம் உட்பட வேறு புராணங்களில் கணபதியின் தோற்றத்தைப்பற்றி பல விதமான கதைகள் இருந்தாலும் அவருடைய தோற்றத்தை சிறப்பாகவும், தத்துவ விளக்கத்துடனும், தெளிவாகவும், எளிதாகவும் விளக்குவது கந்தபுராணத்தில் உள்ள இக்கதை. .

இவ்வாறாக சிவ மூர்த்தமான விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், வீரபத்திர்ர் ஆகிய நால்வரும் சிவபுத்திரர்களாகையால் சிவத்தோடு பேதமற்ற அபேத மூர்த்திகளாகச் சைவத்தில் கொண்டாடப்படுகின்றார்கள். அதேபோல சிவன் மோகினி வடிவம் கொண்ட திருமாலைச் சேர்ந்தபோது தோன்றியவர் ஐயனார் என்று தமிழில் உள்ள சைவத்தின் முப்பெரும் புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் கூறும். புராணங்களையும் சமயக்கதைகளையும் பழித்துரைக்கும் சிலர் சிவனும் திருமாலும் ஆகிய இரண்டு ஆண்கள் ஓரினச்சேர்க்கையாகச் சேர்ந்ததில் தோன்றியவரே ஐயப்பன் என்று கூறி ஏளனம் செய்கின்றனர்.
முதலாவதாக சைவம் பாலியலுக்கு நிறைவான ஆன்மீக முக்கியத்துவமும், விளக்கமும் தருகின்ற சமயம். பாலியலைப் பாவம் என்றும், சாத்தானின் வேலை என்றும் சொல்லிக்கொண்டே குடும்பம் நடத்தும் முரண்பாடு சைவத்துக்கு இல்லை. இரண்டாவதாக சைவம் பிறழ்பால் சேர்க்கையாளர்களை இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலுமே இழிவு படுத்திய சமயமல்ல. சூனியக்காரர்கள் என்றும், சாத்தானின் பிடியில் உள்ளவர்கள் என்றும் இவர்களை உயிரோடு எரித்த சமயமல்ல எமது சைவம். சைவம் இவர்களைக் காலவரையறையின்றிச் சிறையில் அடைத்ததில்லை. மனித நேயமும், அடிப்படை மனித உரிமைப் பட்டயங்களும், மருத்துவமும், விஞ்ஞானமும் இப்போது ஒரு சில வருடங்களாக உணர்ந்து சொல்லிவருவதெல்லாம் சைவம் காலம் காலமாக உணர்ந்த உண்மைகளே என்பதை ஏளனம் செய்பவர்களும், விமர்சிப்பவர்களும் கவனிக்க.

இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும், எங்கும் காணும் தரிசனம் சைவத்தின் முனைப்புண்மை. எம்மில் சிவமும் சத்தியும் செயற்படும் தளங்கள் தான் நாதம், பிந்து தத்துவங்கள். இவை இரண்டும் இணையும் போது அடி வயிற்றின் கீழே உள்ள குண்டலினி என்கின்ற பாலியற் சக்தி மேலெழுந்து மூலாதாரம் முதலாக சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஊடான ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாகச் சிரசு வரை மேல் நோக்கிப் பாய்ந்து இறையனுபவமாகிய பரவச நிலையை, புதிய உணர்வை, பார்வையை, தெளிவை, தரிசனங்களை, விளக்கங்களைத் தருகின்றது. நாதம், பிந்து இணைந்து குண்டலினி சக்தி கீழ் நோக்கிச் செல்லும் போது உலக வாழ்க்கையில் பாலியல் இன்பமாகப் பரிணமிக்கின்றது.

ஆண், பெண், அலி, பிறழ்பாற் சேர்க்கையாளர் என்று எம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்கெனவே இந்த நாதம் ஆண்மையாகவும், பிந்து பெண்மையாகவும் வெவ்வேறு விகிதத்தில் வெளிக்காட்டப்படுகின்றது. ஆணில் பெண்மையும் பெண்ணில் ஆண்மையும் கலந்துதான் காணப்படுகின்றது. இதையே சைவர்களாகிய நாம் ஆண் பாதி, பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றோம். ஆண்களில் நாதம் கூடிய விகிதத்திலும் பிந்து குறைந்த விகிதத்திலும் தொழிற்படுகின்றது; பெண்களில் பிந்து கூடிய விகிதத்திலும் நாதம் குறைந்த விகிதத்திலும் தொழிற்படுகின்றது. அவ்வாறில்லாமல் மாறுபட்டுக் காணப்படும் நிலையில் அலிகளும், பிறழ் பாற் சேர்க்கையாளர்களும் வருகின்றார்கள்.

ஒவ்வொருவரும் தம்முள் உள்ள இந்த நாதம், பிந்து உந்துதல்களின் அகச்சமநிலையைப் பெறும் பொருட்டு புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பற்றீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் வரையுள்ள சிக்கலான உயிரினங்கள் வரை இவ்வுலகிற்கும் இக்காலத்திற்கும் மட்டுமன்றி, அண்ட சராசரங்கள் முழுமைக்கும், எக்காலத்துக்கும் பொருந்துகின்ற சாசுவதமான சைவ உண்மையாகும்.

By. Dr.Ramanathan Lambotharan (MD).