சைவ மரபில் மஹா சாஸ்தா / ஐயனார், ஐயப்பன்… Part – 02

சைவ மரபில்
மஹா சாஸ்தா / ஐயனார், ஐயப்பன்…
Part – 02

சிவனுக்கு நான்கு வகையான சக்திகள் இருக்கின்றார்கள் என காளிதாசரின் குமார சம்பவம் கூறுகின்றது.

ஏகைவ சக்தி;பரமேச்வரஸ்ய
ப்ரயோஜநார்த்தாய சதுர்விதாபூத்
போகே பவாநீ புருஷேஷு விஷ்ணு
க்ரோதே ச காளீ ஸமரே ச துர்கா

இதை தமிழில் கந்தபுராணம் பின்வருமாறு சொல்கின்றது.

“இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
அறைதரு சக்தி நான்காம் அரன்தனக் கையை காளி
முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
பெறலருஞ் சத்தியான்இப் பெற்றியும் மறைகள் பேசும்.”

சிவன் தனது நான்கு சக்திகளில் ஒன்றான திருமாலுடன் சேர்ந்த போது தோன்றியவரே ஐயப்பர். இதைக் கந்தபுராணம் மகா சாத்தாப் படலத்திலே காணலாம்.

நால் வகைப்பட்ட நண்ணிய சக்தியுள்
மாலும் ஆதலின் மற்றது காட்டுவான்
ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறும்
கோலம் எய்திக் குறுகினன் அவ்விடை
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே
மைக்கருங்கடல் மேனியும் வானுலாஞ்
செக்கர்மேனியுஞ் செண்டுறுகையுமாய்
உக்கிரமத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்
அத்தகும் திரு மைந்தற்கு அரிகர
புத்திரன் எனும் நாமம் புனைந்து, பின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே
புவனம் ஈந்து, புவனத்து இறைவனை
அவனை நல்கி, அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன்னருள் செப்புதற் பாலதோ
– கந்த புராணம், மகா சாத்தாப்படலம்

பையராவமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம்! விண்ணோர்க்கும் ஆதியே ஓலம்! செண்டார்
கையனே ஓலம்! எங்கள் கடவளே ஓலம்! ஓலம்!
மெயெயனே ஓலம்! தொல்சீர் வீரனே! ஓலம்! ஓலம்!
ஆரணச்சுருதியோர் சார் அடலுருத்திரன் என்று ஏத்தும்
காரணக்கடவுள் ஓலம்! கடல் நிறத்து எந்தாய் ஓலம்!
பூரணைக்கு இறைவா ஓலம்! புட்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறைமேல் கொண்டு வரும் பிரான் ஓலம்!
-கந்தபுராணம், மகாகாளர் வரு படலம்

இவ்வாறு சிவனே தம்மோடு ஒத்த உருத்திர்ர்களோடு ஒருவராக ஐயனாரை வைத்து, அவருக்கு என்று தனிப்புவனமும் ஈந்து, எல்லாவற்றுக்கும்மேலாக அவரை அமரர்களும், பெருந்தவம் செய்யும் முனிவர்களும் ஏத்தி, வணங்கித் துதிக்கும் பதமும் வழங்கினான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
எட்டுத்திக்குகளிலும் திசைக்குப் பத்தாக உள்ள புவனங்கள் அவற்றுக்கு அதிபதிகளாயுள்ள உருத்திரர்களின் பெயரால் வழங்கப் பெறுகின்றனவென்றும், அவ்வாறாக கிழக்குத்திசையில் உள்ள புவனங்களில் ஒன்று சாஸ்தா புவனம் என்றும் ஆகமங்கள் கூறும்.

இது பிரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் போன்றதாகும். இங்கு எண்ணிறந்த புண்ணியாத்மாக்கள் சாஸ்தா பதம் பெற்று உறைகின்றார்கள். இவர்களில் பத்து சாஸ்தாக்கள் பிரதானமானவர்கள். இவர்களில் தலைமையானவர் மகாசாஸ்தா. இவரையே மகாசாத்தா என்று கந்தபுராணம் பாடுகின்றது.
சைவ நூல்களான ஆகமங்களும், சைவசித்தாந்தப் பெரும்பொருள் கூறும் கந்தபுராணமும் ஏற்றித்துதிக்கும் சிவ, விஷ்ணு, சக்தி அம்சமான ஹரிஹர புத்திரனான ஐயனார் சாஸ்தா மூர்த்திகளுக்கெல்லாம தலைவரான மாகா சாஸ்தாவே ஆவார் இவரையே ஐயனார் என்று சைவர்கள் காலங்காலமாக வழிபட்டு வருகின்றார்கள்.

இந்த பத்து சாஸ்தாக்களில் ஒருவர் தர்ம சாஸ்தா. இவரே இற்றைக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் மணிகண்டன் என்னும் அரசகுமாரனாக அவதரித்தவர் என்பது சபரிமலைத் தலபுராண வரலாறு. இவர் வழிபாட்டுக்கென்று எழுந்த ஆலயமே சபரிமலை ஐயப்பன் ஆலயம்.
பெரியபுராணத்திலும் சேரமான் பெருமாள் திருக்கைலாயத்தில் சிவனுக்கு முன் அரங்கேற்றிய திருவுலாப்பாடல்களை இந்த மாசாத்தானார் என்னும் மகாசாஸ்தா திருப்பிடவூரில் வெளிப்படுத்தி அருளினார் என்று கூறப்பட்டுள்ளது. சேரமான பெருமாள் நாயனார் பாடிய இந்த உலாப்பாடலே தமிழில் உள்ள முதலாவது உலாப்பாடலாகும். ஆதலால் இது ஆதி உலா என்னும் பெயராலும் வழங்கப்படுகின்றது.

சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத் திருவுலாப் புறமன்று
சாரல் வெள்ளியால் கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப்
பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கு
நாரவேலைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினார் நலத்தாலே
– பெரிய புராணம், வெள்ளானைச்சருக்கம்

உலாப் பாடல் என்பது,
பேதை (7 வயது வரை),
பெதும்பை ( 8 இல் இருந்து 11 வயது வரை),
மங்கை (12 இல் இருந்து 13 வயது வரை),
மடந்தை ( 14 வயதில் இருந்து 16 வயது வரை),
அரிவை ( 16 வயதில் இருந்து 25 வயது வரை),
தெரிவை ( 26 இல் இருந்து 31 வயது வரை),
பேரிளம்பெண் ( 32 இல் இருந்து 40 வயது வரை)
உள்ள எட்டு பருவத்துப் பெண்களும் வீதியில் உலா வரும் அரசனையோ அரசகுமாரனையோ ஆசையோடு பார்த்து ஈர்க்கப்பட்டு வரும் ஒருதலைக் காதல் ஆகும். ஆங்கிலத்தில் இதனை CRUSH என்று சொல்வார்கள்.
பின்வரும் தனிப்பாடல் இப்பருவங்களில் வயதெல்லையைக் கூறுகின்றது.

போதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை – யோதுபதி
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு

நிற்க, சைவ ஆகமங்களிலும் சுப்பிரபேத ஆகமத்திலும், பூர்வகாரணாகமத்திலும், அம்சுமத் பேத ஆகமத்திலும் ஐயனாரைப் பற்றியும் அவருடைய உருவ லட்சணங்களைப்பற்றியும் பேசப்படுகின்றது. இதேபோல் சில்பரத்தினம் என்னும் நூலும், தீட்சேந்திரம் என்னும் நூலும் ஐயனாரைப்பற்றிய தகவல்கள் உள்ள நூல்களாகும். ஆனால் பிற்காலத்தெழுந்த ஐயப்பன் உருவ அமைப்பு பற்றிய செய்திகளோ அவருக்குரிய வழிபடுமுறைகளோ, விரதங்களோ ஆகமங்களில் இல்லை. ஆகவேதான் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் ,மரபுப்படி நெய் நிறைத்தல், இருமுடி கட்டுதல், பதினெட்டுப்படி பூசை முதலானவை எல்லா இடங்களிலும் ஐயப்ப வழிபாட்டில் பின்பற்றப்படுகின்றன.

இன்றைய ஐயப்ப வழிபாடானது பாரம்பரியமான ஐயனார் வழிபாட்டுடனும், சிவ வழிபாடுடனும், விஷ்ணு வழிபாட்டுடனும், சக்தி வழிபாட்டுடனும் ஒத்திசைந்து எழுந்த புதியதோர் வழிபாட்டு மரபு எனலாம். பாரம்பரியமான மகாசாத்தா வழிபாடான ஐயனார் வழிபாட்டையும் ஆலயங்களையும் இடமாகக் கொண்டாலும் அவற்றை ஆக்கிரமித்து பிரதியீடு செய்யாதவரை, தர்மசாஸ்தாவான ஐயப்பன் வழிபாடு ஆகமச் சைவ நெறிக்கும், கந்தபுராணம் போன்ற சைவத்தமிழ் இலக்கியங்களுக்கும் முரணில்லாத, அமைவான, இசைவான வழிபாடாக கொள்ளலாம்.

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சேர்மின்களே
– சம்பந்தர் தேவாரம்