பஞ்ச சாதாக்யம் / ஐவகை சிவலிங்கம்

பஞ்ச சாதாக்யம் / ஐவகை சிவலிங்கம்

• சிவலிங்கம் சாதாக்கிய வடிவம். இச் சாதாக்கிய வடிவம் ஐவகைப் பட்டது.

1. சிவ சாதாக்கியம்:

இது தூய சக்தி வடிவம்; அதி சூக்குமமானது; அளவற்ற ஒளி வடிவானது; ஞானிகளின் தியானத்தில் மின்னல் போலத் தோன்றுவது.

2. அமூர்த்தி சாதாக்கியம்:

வானமும், பூமியும் கடந்து அண்ட சராசரங்களின் எல்லை தாண்டி அடி, முடி தெரியாத ஓங்கிய ஒளித் தூணாக நிற்பது.

3. மூர்த்தி சாதாக்கியம்:

அக்கினிப் பிரகாசமாய் முக்கண்களோடு விளங்கும் ஒரு திருமுகத்தையுடைய இலிங்க மூர்த்தம்.

4. கர்த்திரு சாதாக்கியம்:

திவ்விய படிகப் பிரகாசமாய், நான்கு முகங்களும், எண் புயமும், பன்னிரு கண்களும் உடையதாய் விளங்கும் இலிங்கத் திருமேனி.

5. கன்ம சாதாக்கியம்:

இதுவே நாம் வழிபடும் சிவலிங்க மூர்த்தமாகும். நாதமாகிய லிங்கமும், பிந்துவாகிய பீடமும் கூடிய நிலையில் உள்ள சிவலிங்க வடிவம்.

• நாம் வழிபடும் கன்ம சாதாக்கிய இலிங்கத்தில் இந்த பஞ்ச சாதாக்கியமும் அடங்கி உள்ளது. சிவசாதாக்கியம் உச்சி நோக்கிய ஈசான முகத்திலும், அமூர்த்திசாதாக்கியம் மேற்கு நோக்கிய சத்தியோசாத முகத்திலும், மூர்த்திசாதாக்கியம் வடக்கு நோக்கிய வாமதேவ முகத்திலும், கர்த்திருசாதாக்கியம் தெற்கு நோக்கிய அகோர முகத்திலும், கருமசாதாக்கியம் கிழக்கு நோக்கிய தற்புருட முகத்திலும் பொருந்துகின்றன.
• ஆதலால் கன்ம சாதாக்கிய வடிவான நாம் வழிபடும் சிவலிங்கமானது பஞ்ச சாதாக்கியங்களும் ஒன்றாகத் திரண்ட திருமேனியாகும். வடக்கு நோக்கி அமர்ந்து பூசித்தாலும் இவற்றில் தற்புருட முகம் நோக்கியே பூசை, நிவேதனம் முதலானவை செய்யப்படுகின்றன.
• எத் திசை நோக்கிப் பூசித்தாலும் தம்மை நோக்கிய தாம் பூசிக்கும் முகத்தை தற்புருட முகமாகப் பாவித்து, அந்த திசைக்குரிய முகத்தை தற்புருஷத்தின் கிழக்கு முகத்துப் பதிலாகப் பொருத்திப் பாவித்துப் பூசித்தலும் வழமையாம்.

* உச்சி / ஊர்த்துவ திசை – ஈசான முகம் – சிவ சாதாக்கியம்
* மேற்குத் திசை – சத்தியோசாத முகம் – அமூர்த்தி சாதாக்கியம்
* வடக்குத் திசை – வாமதேவ முகம் – மூர்த்தி சாதாக்கியம்
* தெற்குத் திசை – அகோர முகம் – கர்த்திரு சாதாக்கியம்
* கிழக்குத் திசை – தற்புருட முகம் – கன்ம சாதாக்கியம்

கன்ம சாதாக்கியம் காண் ………………………..
…………………………………..வாமம் மதித்திடில் சிவம் ஈசானம்.
கன்ம சாதாக்கியத்திற்………………….
………………………………… திசை தொறுங் கொடுக்கக் கற்றோர்.

– ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவசமய நெறி உரையில்
“ஐந்தியற் சத்திகள் ஆயினோர் தமைத்
தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழி
சிந்தனை அருச்சனை செய்து யாவரும்
உய்ந்திடச் சதாசிவ உரு ஐந்து உற்றதும்”
– கந்தபுராணம்

• நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ…
இங்கு நான்முகத்தாய் என்றது கர்த்திரு சாதாக்கிய இலிங்க மூர்த்தியை.
– திருநாவுக்கரசர் தேவாரம், 4ம் திருமுறை

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).