ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
குருவடி பணிந்து
மருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD
கனடா சைவசித்தாந்த பீடம்
- ஆகமம் என்றால் என்ன?
ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்று பொருள்.
ஒ-டு: ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம்
குரவே கண்டாரவம் தத்ர தேவதாஹ்வாநு லாஞ்சனம்
- ஆகமம் எங்கிருந்து வந்தது?
இறைவனிடம் இருந்து வந்தது?
‘வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்று திருமந்திரம் கூறும்.
ஆகவே வேதங்களோடு ஆகமங்களும் மெய்யை விளக்கும் மெய் நூல்களாம். இவை மெய்யாகிய இறையிடம் இருந்து வந்தவை. மெய்யாகிய இறையின் மெய் வாக்குகள். இவை மெய்யிடம் இருந்து வந்து, மெய்யை விளக்கும் மெய் நூல்களாக் இருப்பதால் இவற்றை மெய் என்றே கொள்வர். Agamas are the texts explaining the TRUTH, came from the TRUTH, thus they themselves are the embodiment of the TRUTH.
- ஆகமம் எந்த மொழியிலே சொல்லப்பட்டது? எங்கே சொல்லப்பட்டது?
சுத்தமாயா தத்துவத்திலே சூக்குமை வாக்கினால் சிவபெருமான் சதாசிவமூர்த்தியாக இருந்து சொல்ப்பட்டது.
நாம் இருக்கும் உலகத்தொகுதி பிரகிருதி மாயையைச் சேர்ந்தது. இங்கு ஆன்ம த்த்துவங்கள் இருபத்து நான்குக்கும் மொத்தமாக நூற்று அறுபத்து நான்கு புவனங்கள் உள்ளன. இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு வைகரி. அதாவது நமது எண்ணம் கருவாகி மனதில் உருவாகி வாயினூடாக மற்றவர்களுக்கு கேட்கக்கூடிய ஓசையுடன் வெளிப்படுத்தப்பட்டு தொடர்பாடல் நடைபெறுகின்றது.
இதற்கு அப்பால் அசுத்தமாயா தத்துவத்தில் வித்தியா தத்துவங்கள் ஏழிற்குமாக இருபத்தேழு புவனங்கள் உள்ளன. இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு மத்திமை. அதாவது நமது எண்ணம் மனதில் கருவாகி முழுமையாக உருப்பெற்றதுமே மற்றவர்களுக்கு தொடர்பாடல் நடைபெறுகின்றது. இங்கு ஓசை இல்லை.
இதற்கும் அப்பால் சுத்தமாயா தத்துவத்தில் சிவ த்த்துவங்கள் ஐந்திற்குமாக முப்பத்துமூன்று புவனங்கள் உள்ளன. இங்கு தொடர்பாடலுக்குரிய வாக்கு பஸ்யந்தி. இங்கு நமது எண்ணம் மனதில் கருவாகி நமக்கே நமது எண்ணம் முழுமையான உருவாகத் தெரிவதற்கு முன்னமே மற்றவர்களுக்கு தொடர்பாடல் நடந்துவிடும்.
இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டவன் பரசிவன் என்னும் இறை. அவனது சக்தி பராசக்தி. அவனே பரப்பிரம்மம்; அவனே பரஞ்சோதி; அவனே பரம்பொருள்; அவனே பரமாத்மா; அவனே பரமானந்தம்; அவன் உறையும் இடம் பரலோகம், இது இந்த முப்பத்தாறு தத்துவங்க்ளுக்கு உட்பட்டதல்ல. அதானல்தான் இறையை நாம் தத்துவ அதீதன் என்கின்றோம். இதற்கு தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று பொருள். இந்த அப்பாற்பட்ட இடத்திலே தொடர்பாடலுக்குரிய வாக்கு பரை வாக்கு. இதை சூக்குமை வாக்கு என்றும் கூறுவர். இங்கு எண்ணம் கருவாகத்தொடங்க முன்னரே தொடர்பாடல் நடந்துவிடும். அதாவது தொடர்பாடல் எனும் தேவையோ செயலோ இன்றி இது நடந்துவிடுகின்றது.
மாயா தத்துதவங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன், சிவ சாரூபம் பெற்று சதாசிவ பதத்தில் சுத்தமாயா தத்துவ புவனங்களில் வந்து உறையும் பிரணவர் முதலிய பத்து சிவர்களுக்கும் அவர்கள் ஒவ்வொருவர் சார்பாக இவ்விரண்டு சிவர்களுக்குமாக மொத்தம் முப்பது சிவர்களுக்கு உபதேசித்தார். இவ்வாறு உபதேசிக்கப்பட்ட பத்து ஆகமங்களும் சிவபேத ஆகமங்கள் எனப்படுகின்றன.
இவ்வாறே உருத்திர பதம் பெற்று இதே புவனங்களில் வந்துறையும் பதினெட்டு உருத்திரர்களுக்கும் இவர்கள் ஒவ்வொருவார சாராபாக ஒவ்ஒரு உருத்திர்ருக்குமாக மொத்தம் முப்பத்தாறு உருத்திரர்களுக்கு உபதேசித்தார். இவ்வாறு உபதேசிக்கப்பட்ட பதினெட்டு ஆகமங்களும் உருத்திர பேத ஆகமங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்வறாக மொத்தம் அறுபத்தாறு பேருக்கு சிவன் ஆகமங்களை உபதேசித்தான் இந்த விபரம் திருமந்திரத்தில் காணப்படுகின்றது.
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
- திருமந்திரம்