இந்துவா சைவமா

இந்து சமயம் என்பது வேதங்களை தமது அடிப்படை நூலாக ஏற்றுக் கொண்ட எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ஒரு மதக்குழுமம் ஆகும். இந்து சமயம் எனும் பெயர் எமது வேத ஆகமங்களிலோ, புராண இதிகாசங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ, மெய்கண்ட சாத்திரங்களிலோ, பண்டைய நூல்களிலோ காண்ப்படவில்லை. இந்து என்னும் சொல் சந்திரனைக் குறிப்பதாகவே இருந்தது.  மத்திய ஆசியாவில் இருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் பண்டைய இந்தியாவில் இருந்த பாரம்பரிய நம்பிக்கைகள், வழிபாடுகள், தத்துவங்கள் அனைத்தையும் சேர்த்து ஒத்துமொத்தமாகக் கொடுக்கப்பட்ட பெயரே இந்து மதம். வேதங்களை ஏற்றுக்கொள்ளாத பௌத்தம், சமணம் ஆகிய மதங்களும் இந்திய அரசியல் சட்டப்படி இந்து மதங்களே.

பணடைய வைதீக நெறியின் படிவமே இன்றைய இந்து சமயம் எனலாம். இதிலே இன்றுள்ள சிவனைக் கடவுளாகக் கொள்ளும் சைவம், விட்டுணுவைக்  கடவுளாகக் கொள்ளும் வைணவம் ஆகிய இரண்டும் உள்ளடங்கும். ஆயினும் இலங்கையில் வைணவம் தனி மதமாக இல்லாத படியினால் இந்து என்னும் சொல் சைவத்தை மட்டுமே குறிப்பதாக இருந்து வருகின்றது.

மேற்சொன்ன சமயங்களோடு ஆதி சங்கரர் நிறுவிய வேதாந்த சமார்த்த மதமும் சேர்ந்ததே இன்றைய இந்து சமயத்தின் கூறுகளாகும். ஆயினும் சிலர் சைவம், வைணவம் ஆகியவற்றோடு சக்தியைக் கடவுளாக வழிபடும் சாக்தம், கணபதியைக் கடவுளாக வழிபடும் காணாபத்தியம், குமரனைக் கடவுளாக வழிபடும் கௌமாரம், சூரியனைக் கடவுளாக வழிபடும் சௌரம் என ஆறு மதங்களின் கூட்டே இந்து சமயம் என்பர். ஆனால் நடைமுறையில் சைவம், வைணவம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் நான்கில் எதுவுமே ஒரு தனிச் சமயமாக எங்கும் நிலை நிறுத்தப்படவில்லை; அவ்வாறு நடைமுறையிலும் இல்லை. சில இடங்களில் சக்தி வழிபாடு தனித்துவமாக இருந்தாலும் நுணுக்கமாகப் பார்க்கும்போது சிவ வழிபாட்டின் ஒரு வடிவமாகவே அங்கு சக்தி வழிபாடு இருப்பது புரியும்.

மேற்சொன்ன ஆறு சமயங்களையும் ஆதி சங்கரர் தான் நிலை நிறுத்தினார் என்றும் அதனாலேயே அவருக்கு ஷண்மத ஸ்தாபகர் என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.

உண்மையில் இத் தெய்வ வழிபாடுகள் பொது யுகம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நிலை பெற்றிருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணிமேகலை என்னும் காப்பியத்தில் மணிமேகலையானவள் ஒரு சைவவாதியுடன் உரையாடியதை

”இறைவன் ஈசன் என நின்ற சைவ வாதி நேர்படுதலும்

பரசும் நின் தெய்வம் எப்படித்து?”

எனக் கேட்டு உரையாடியதாகக் குறிப்பிடுகின்றது.

ஆதி சங்கரர் காலத்துக்கு முந்திய திருமந்திரத்தில் திருமூலர் சுத்தசைவம், அசுத்த சைவம், கடுஞ்சுத்த சைவம், மார்க்க சைவம் எனும் நால் வகைச் சைவம் பற்றிக் கூறி சைவ சித்தாந்தம் பற்றியும் கூறியுள்ளார்.

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற

பேரறி வாளன் பெருமை குறித்திடில்

ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்

தாரணி நால்வகைச் சைவமு மாமே.

  • திருமந்திரம் பாடல் 1419

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்

முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே

சொற்பதம் மேலித் துரிசற்று மேலான

தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

  • திருமந்திரம் பாடல் 1421

ஆதி சங்கரர் காலத்துக்கு முந்திய இராஜசிம்மன் என்னும் பல்லவ மன்னன் தனது கால்த்தில் பதிப்பித்த கைலாசநாதர் கோவில் கல்வெட்டில் தான் ஒரு சைவ சித்தாந்தி என்று குறிப்பிட்டுள்ளான்.

ஆதி சங்கரர் தாம் பாடிய சௌந்தர்யலகரியில் அம்பாளின் அழகு வடிவத்தைப் பாடும்போது தனது காலத்துக்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்னர் வாழ்ந்த திருஞானசம்பந்தருக்கு பார்வதி பால் கொடுத்த வரலாற்றைத் திராவிட சிசுவுக்குப் பால் கொடுத்த தனங்கள்  என்று  பின்வரும் பாடலில் பாடியுள்ளார்.

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத -மிவ

தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்

கவீனாம் ப்ரௌடானா-மஜனீ கமனீய: கவயிதா.

  • ஆதி சங்கரர் அருளிய சௌந்தர்யலஹரி, பாடல் 75

இதையே வீரநல்லூர் எனும் இடத்தில் வாழ்ந்த வீரைக் கவிராஜ பண்டிதர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அழகு தமிழில் பின்வருமாறு வடித்துள்ளார்.

தருண மங்கலை உனது சிந்தை தழைந்த பால் அமு தூறினால்

அருண கொங்கையில் அது பெருங்கவி அலைநெடுங் கடல் ஆகுமோ?

வருண நன்குறு கவுணியன் சிறு மதலை அம் புயல் பருகியே

பொருள் நயம் பெறு கவிதை என்றொரு புனிதமாரி பொழிந்ததே.

இங்கு கவுணியன் சிறுமதலை என்றது கவுணிய கோத்திரத்தில் உதித்த திருஞானசம்பந்தரை. இவர் சைவ சமய குரவர்களில் முதன்மையானவர்.

இவ்வாறாகச் சைவம் என்னும் சொல்லும் சமயமும் ஆதிசங்கரர் காலத்துக்கு முன்பதாகவே நன்கு வேரூன்றி வழமையில் இருந்துள்ளது. ஆகவே ஆதி சங்கரர் தாபித்ததே சண்மதங்கள் என்னும் ஆறுமதங்களும் என்று வேதாந்த மரபினர் கூறுவது அவரவர் வழமையில் தத்தமது குருமாருக்குச் சொல்லும் உபசார வார்த்தைகளாகக் கொள்ளலாமே அன்றி உண்மை வார்த்தைகளாக அல்ல.

இன்னும் சிலர் பொதுயுகம் ஏழாம் நூற்றாண்டில்  வாழ்ந்த சம்பந்தர் காலத்துக்குப் பின்னர் பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் காலத்துக்கு முன்னர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சரித்திராசியர்கள் சொல்லும் ஆதி சங்கரரை பொது யுகத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகப் புனைகதை கூறி அதற்கு சங்கர மட மரபில் பிற்காலத்தில் எழுந்த சங்கரவிஜயம் என்னும் புனைவுகளுடன் கூடிய ஆதி சங்கரரின் புராண வரலாற்றை ஆதாரமாகக் கூறுவர்.  ஆயினும் இது

வரலாற்று இலக்கிய ஆதாரங்களுக்கு முரணான கூற்றாகும். 1950 களில் காஞ்சிப்பெரியவர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டும் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்து அதிபர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் 1950களில் சென்னைக்கு விஜயம் செய்து பல மாதங்கள் தங்கியிருந்தபோது ஆற்றிய உரைகளில் ஆதி சங்கரரின் காலத்தை முன் சொன்ன சௌந்தர்யலகரிச் செய்யுளை எடுத்துக்காட்டி சம்பந்தருக்குப் பிந்திய காலமாகவே கூறியுள்ளார்கள். இது அப்போது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் இரண்டு சிறு புத்தகங்களாக வெளியான சென்னை உபன்னியாசங்கள் எனும் புத்தகத்தில் உள்ளது. ஆயினும் பின்னர் இதே தகவல் பிற்காலத்தில் தெய்வத்தின் குரல் எனும் பெயரில் ஏழு பாகங்களாக வெளியான நூற்தொகுப்பில் சங்கரவிஜயம் எனும் நூலுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள ஏனைய பிரதான நான்கு சங்கர சம்பிரதாய மடங்களின் மரபுக் கதைகளுடன் முரணுறாமல் இருப்பதற்காக இருக்கலாம்.

உருவம் குணங்கள் அற்ற நிர்க்குணப் பிரம்மத்தை தத்துவவாதிகளுக்கு வேதாந்த தத்துவமாக நிலை நிறுத்திய ஆதி சங்கரருக்கு சாதாரண மக்களுக்கு நடைமுறையில் அதைக் கொடுக்க முடியவில்லை. ஆகவே நிர்க்குணப் பிரம்மத்தின் உருவம் குணங்களுடன் கூடிய வெளிப்பாடான சகுணப் பிரம்மமாக அவர் ஏற்கெனவே இருந்த இத் தெய்வங்களை கொண்டு அந்த வழிபாடுகளை ஏற்றுக் கொண்டார். இதனாலேயே இன்றும் வேதாந்திகள் இந்தத் தெய்வ வடிவங்களை எந்த வித பேதமும் இன்றி வழிபடுகின்றனர் ஆயினும் இவ்வடிவங்களும் அவற்றின் வழிபாடுகளும் வேதாந்த தத்துவ ஞானம் கைவரப் பெறாத அஞ்ஞானிகளாகிய பாமரர்களுக்கே என்று கூறுவர். வேதாந்த ஞானம் கைகூடிய ஞானிகளுள் சிலர் உலகத்துக்கு உதாரணமாக இருக்கவேண்டுவதற்காகவே இத் தெய்வ வடிவங்களையும் வழிபாடுகளையும் ஆற்றுகின்றார்கள் என்பது அவர்கள் கூற்று.

சிவனை வழிபடுபவர்கள் எல்லோரும் சைவர்கள் அல்லர். வைணவர்கள் சிவனையோ சிவ மூர்த்தங்களான கணபதி, அம்பாள், முருகன் ஆகியோரை ஒருபோதும் வழிபடுவதில்லை. ஆனால் சைவர்கள் வைணவக் கடவுளான விட்டுணுவையும், இலக்குமியையும் சிவனால் அதிட்டக்கப்படும் தெய்வங்களாக வழிபடுவர்.  சிவனைக் கடவுளாக வழிபடும் வேதாந்திகள் இருந்தாலும் அவர்கள் சிவனை மேலான நிர்க்குணப் பிரம்மத்தின் கீழ் நிலையில் உள்ள சகுணப் பிரம்ம வடிவாகவே பார்ப்பதுடன் விட்டுணு போன்ற ஏனைய சகுணப்பிரம்ம தெய்வ வடிவங்களுக்கு இணையான இன்னொரு வடிவாகவே கருதுவர். அவர்கள்

”சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை”

எனும் திருமூலர் சொல்லும் வாக்குடன் ஒத்துறுவதில்லை.

சிவன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்னும் நிலைப்பாட்டில் நிற்பவர்கள் சைவர்கள். ஆயினும் இவர்கள் யாவரும் சைவ சித்தாந்திகள் அல்லர். சைவ சித்தாந்திகள் வேதங்களை தமது பிரமாண நூல்களாக ஏற்றுக்கொண்டாலும் அதற்கும் அப்பால் சிவாகமங்களையே தமது சிறப்பு நூல்களாக கொள்வர். “ சிவாகமங்கள் சித்தாந்தம் ஆகும்” என்று சிவஞான சித்தியார் கூறும். இவர்களில் சிவ சமவாதிகள், சிவ சங்கிராந்த வாதிகள், பாடாண வாதிகள், பேத வாத சைவர்கள், ஈச்வர அவிகார வாதிகள், சிவாத்வைதிகள் முதலான பல பிரிவினர் உள்ளனர். இவர்கள் யாவரும் சிவனே முழுமுதற் கடவுள் என்று கொண்டாலும் தத்துவ நெறியில் வேறுபட்டு தனித்துவமாக நிற்பர். ஆயினும் இவர்களை நடைமுறையில் இன்று காண்பதற்கில்லை.

சிவாகமங்களை விட வேறு நூல்களைத் தமக்குப் பிரமாணமாகக் கொண்ட இன்றைய அகோரிகள் போன்ற காளாமுகர், பைரவர், காபாலிகர், மாவிரதிகள் பாசுபதர் ஆகியோரும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவர்களே. வாமர்கள் சக்தியை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சைவர்கள். சிவன் தலைமயிரில் பூணூல் செய்து அணியும் மாவிரதியாக வந்து மணப்பந்தலில் நின்ற மானக்கஞ்சாற நாயனாரின் மகளின் கூந்தலை தனது பூணூலுக்காக கேட்டு அரிந்து பெற்றதாகவும், பைரவ சன்னியாசியாக வந்து பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்டதாகவும் 63 நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லும் எமது பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணம் கூறுகின்றது.

சைவக்கோயில்களில் இவ்வாறு பல்வகைப்பட்ட 63 நாயன்மார்களுக்கும் அவர்களின் உருவச்சிலைகளும் வழிபாடுகளும் இருந்தாலும் ஷண்மத தாபகர் என்று சொல்லப்படும் ஆதி சங்கரருக்கு எங்கும் வழிபாடோ சிலைகளோ காணப்படுவதில்லை. கோவில் கோபுர சிற்பங்களில் கூட ஆதி சங்கரர் படிமங்கள் கிடையாது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் சில ஆலயங்களில் புதிதாகத் தாபிக்கப்பட்ட சங்கரர் சிலைகள் இதற்குள் அடங்கா. ஆதி சங்கரருக்கு ஆதி சைவர்கள் பூசை செய்வதும் இல்லை. சைவர்கள் தமது பூசையில் கொள்ளும் குரு பரம்பரையில் 22 குருமாரில் ஆதி சங்கரர் இல்லை.

ஆயினும் இப்பொழுது அதிசங்கர மடங்களிலும் ஆதிசைவ அந்தணர்களுக்கு ஆகமப் பாடசாலைகள் நடக்கின்றன. பல ஆகமப் பாடசாலைகளுக்கு காஞ்சி சங்கர மடம் உதவிகளும் செய்து வருகின்றது. இப்பாடசாலைகளை நடாத்தும் குருமாருக்கும் பட்டங்களும், கௌரவங்களும், சன்மானங்களும் சங்கர மடத்தினால் வழங்கப்படுகின்றன. நவீன இந்து அமைப்பான வாழும் கலை அமைப்பின் குருவான இரவிசங்கர் பெங்களூரில் ஆகமப்பாடசாலை ஒன்றைச் சிறப்பாக நத்திவருகின்றார். அத்தோடு கடந்த ஒரு நூற்றாண்டில் ஆகம மரபில் ஆதிசைவர் பூசை செய்யும் மரபில் இருந்த பல கோயில்கள் கல்ப சூத்திரங்களையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட  பிராமணர்களினால் பூசை செய்யப்படும் கோவில்களாக மாற்றமடைந்து வருகின்றன. இக்கோவில்களிலும் தொடக்கத்தில் கும்பாபிஷேகம், மஹோற்சவம் போன்றவற்றிற்கு ஆதிசைவர்களின் தயவில் செய்ய வேண்டியிருந்தாலும் இப்போது அவற்றையும் தமது முறைப்படி செய்யத் தலைப்பட்டுள்ளனர். இவற்றினூடாக இந்நிலைமைகள் சிறிது சிறிதாக தமிழகத்திலும் இலங்கையிலும் மாற்றம் அடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.